பிறர் அறியா பிரவுசிங் வழி!



தற்போது அதிக புழக்கத்தில் உள்ள பிரவுசர்கள் அனைத்திலும், நம் இணைய உலாவினை மற்றவர்களிடமிருந்து மறைக்கும் வழிகளைக் கொண்டுள்ளன. ஆனால் இதனைப் பலரும் பயன்படுத்துவதில்லை. ஒரு சிலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை பிறர் அறியா (incognito mode) அல்லது தனி நபர் நிலை (Private) என அழைக்கின்றனர்.



சிலர் இதனை பாலியல்நிலை (Porn mode) எனவும் அழைக்கின்றனர். ஏனென்றால், இணையத்தில் உள்ள பாலியல் சார்ந்த தளங்களைக் காண்கையில், தங்களின் தேடலை மறைத்துக் கொள்வதற்காக, இந்நிலையினைப்பயன்படுத்துவதால், இந்த பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.

ஆனால், இவ்வாறு அழைப்பது தவறான ஒன்றாகும். ஒரு சிலர் அவ்வாறு பயன்படுத்தினர் என்றாலும், பலர் இந்த நிலை தரும் உயரிய பயன்களுக்காகவே பயன்படுத்தி வருகின்றனர். அதனால், இதனை அனைவரும் சில வேளைகளில் பயன்படுத்த வேண்டும் என்றே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நிலைகளை இங்கு பார்க்கலாம்.

தனிநபர் நிலை (Private mode) என்பது என்ன?

இந்த நிலைகளில் நீங்கள் இணையத்தில் உலா வருகையில், நீங்கள் பார்க்கும் தளங்கள் எவை எவை என மற்றவர் அறிந்து கொள்ள இயலாது. கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறிய இயலாதே ஒழிய, உங்களுக்கு இணைய இணைப்பினை வழங்கும் இணைய சேவை நிறுவனங்கள் (Internet Service Providers) மற்றும் ஆன்லைன் மையங்கள் அறிந்து கொள்ளலாம். அவர்களும் அறியக் கூடாது என நீங்கள் விரும்பினால், நீங்கள் உங்களுக்கென சொந்தமான தனி நெட்வொர்க்கினை (Virtual private network (VPN).) அமைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இந்த தனிநபர் அல்லது பிறர் அறியா நிலையில், நீங்கள் பிரவுஸ் செய்திடுகையில், உங்களுடைய தேடல் மற்றும் இணைய தளத் தேடல் கள் குறித்து குறிப்புகள் அழிக்கப்படுகின்றன. பதியப்படுவதில்லை. ஹிஸ்டரி ஏற்படுத்தப்படுவதில்லை. இந்த நிலையை எப்படி மேற்கொள்வது என, சார்ந்த தளங்களிலேயே தெரிந்து கொள்ளலாம். இதனை நமக்கு அதிகப் பயன் தரும் வகையில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

கட்டணம் கேட்கும் தளங்களில்: பல இணைய தளங்கள், தங்களின் தளங்களில் உள்ள தகவல் கட்டுரைகளைப் படிக்க அனுமதிக்கும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்திட அனுமதிக்கும். குறிப்பிட்ட அளவினைத் தாண்டியவுடன், கட்டணம் செலுத்துமாறு கேட்கும். நீங்கள், முதலில் இந்த தளம் சென்று பயன்படுத்துகையில், பிறர் அறியா தனி நபர் நிலையில் பயன்படுத்தினால், சிறிது காலத்திற்குப் பின்னர், கட்டணம் கேட்கப்படும் பிரச்னை எழாது.

ஏனென்றால், உங்களைப் பற்றிய தகவல் கொண்டுள்ள குக்கி பைல்கள் பதியப்பட மாட்டாது என்பதால், அதன் அடிப்படையில் கட்டணம் செலுத்துமாறு, குறிப்பிட்ட இணைய தளத்தால் கேட்க இயலாது. உங்களை அடையாளம் காட்டும் குறிப்புகள் அடங்கிய குக்கி பைல்கள் இல்லாததால், ஒவ்வொரு முறை நீங்கள் இந்த இணைய தளத்திற்குச் செல்கையில், நீங்கள் முதல் முறை வரும் புதிய நபராகவே பார்க்கப்படுவீர்கள்.
இத்தகைய தளங்களில் சில, நீங்கள் குறிப்பிட்ட தளப் பக்கத்தினை, பேஸ்புக் அல்லது ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் அணுகினால், தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கும். கட்டணம் கேட்காது.

பொது இணைய மையங்கள்: ஸ்மார்ட்போன், டேப்ளட் பி.சி.க்கள், புதிய சிறிய லேப்டாப் கம்ப்யூட்டர்கள் அதிகம் புழக்கத்தில் இருப்பதால், நாம் இணைய மையங்களுக்கு அவ்வளவாகச் செல்வதில்லை. அல்லது பொது நூலகங்கள் சென்று, அங்குள்ள இணைய இணைப்பினைப் பயன்படுத்துவதில்லை. ஆனாலும், சில வேளைகளில் நாம் பொதுவான மையங்களுக்குச் செல்கிறோம்.

இங்கு இணைய தளங்களுக்குச் சென்று, உங்களுக்குத் தேவையான தளங்களைப் பார்வையிடுகையில், அதற்கான, ஏற்கனவே பதிந்து வைத்த யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்துப் பயன்படுத்துவீர்கள். இவை பதியப்படுவதால், அடுத்து வருபவர்களும், இவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் உருவாகும். எனவே, மற்றவர்கள் கண்களில் இருந்து தப்பிக்க, இத்தகைய பொது இணைய மையங்களில், பிறர் அறியா, தனி நபர் நிலையைப் பயன்படுத்தலாம். இந்த நிலை உங்கள் தனி நபர் தகவல்களுக்கு நல்லதொரு பாதுகாப்பினைத் தரும்.

ஹிஸ்டரி வேண்டாமே!: 

நாம் செல்லும் இணைய தளங்கள் குறித்த ஹிஸ்டரி பதிவுகளை ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது. மோசமான தளங்களைப் பார்க்க மட்டுமின்றி, வேறு சிலவற்றிற்கும் இந்த பாதுகாப்பான நிலை பயன்படும். தீவிரமான உடல் கொல்லி நோய் குறித்து உங்களுக்குத் தகவல்கள் தேவை. இந்த நோய், உங்களையோ அல்லது வேண்டியவர்களையோ பாதித்திருக் கலாம்.

எனவே, இணைய தளங்களைத் தேடுகையில், இவற்றிற்கான முகவரிகள் மற்றும் தேடல் சொற்கள் பதியப்படுவதால், அவற்றை நீங்கள் தேடினீர்கள் என்பது, மற்றவர்கள் இணையத் தேடுதலை மேற்கொள்கையில் காட்டப்படலாம். அல்லது, மற்றவர்களுக்கு திடீரென சந்தோஷ அதிர்ச்சியை ஏற்படுத்த, பரிசு ஒன்று கொடுப்பதற்கு, இணைய தளத்தினைப் பயன்படுத்தலாம். இதனை உங்கள் குடும்ப நபர்களே அறியக் கூடாது என நீங்கள் விரும்பலாம். அத்தகைய சூழ்நிலைகளில், இந்த பிறர் அறியா, தனிநபர் நிலையை மேற்கொள்ளலாம். தேவைப்படும் போது இவற்றைப் பயன்படுத்துவதே சிறந்தது.

நன்றி கம்ப்யூட்டர் மலர்
பிறர் அறியா பிரவுசிங் வழி! பிறர் அறியா பிரவுசிங் வழி! Reviewed by tamil4health on 5:57 PM Rating: 5

No comments:

Powered by Blogger.